Menubar

14.2.12

The first meeting of Kamal Haassan and Writer Sujatha

கமல்-சுஜாதா முதல் சந்திப்பு - அமுதவன்

Kamal Hassan and Writer sujatha
நடிகர் கமலஹாசனை அவருடைய மூன்று முடிச்சு படத்தின் படப்பிடிப்பின் சமயத்திலிருந்து அறிமுகம். குடிசை படத்தின் இயக்குநர் நண்பர் ஜெயபாரதி மூலம் பழக்கம். கமல் அந்த நாட்களிலிருந்தே இலக்கியம், விஞ்ஞானம், திரைப்படம், செக்ஸ், அரசியல் என்று எல்லா விஷயங்களும் பேசுவார். அவருடைய பொதுஅறிவு வியக்கவைப்பதாக இருக்கும். 
பெங்களூரில் முதன்முறையாக அவரைச் சந்தித்தபோது சுஜாதா பற்றிய பேச்சு வந்தது. “அமுதவன், அவரைச் சந்திக்கவேண்டுமென்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம். என்னைக் கூட்டிப்போகிறீர்களா?” என்று கேட்டார். 
“வாருங்கள் இப்போதே போவோம்” என்றேன். மைசூர் பக்கம் படப்பிடிப்பிற்குப் போவதற்காக பெங்களூர் வந்திருந்தார் கமல். படப்பிடிப்பு நிர்வாகிகளிடம் கேட்டதற்கு உடனடியாக மைசூர் கிளம்பவேண்டியிருக்கும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் “எப்படியும் அடுத்தமுறை சந்தித்துவிடுவோம். அவரிடம் சொல்லிவைத்திருங்கள்” என்றார். சரியென்று சொல்லியிருந்தேன். 
அடுத்தமுறை திருமணம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்தபோது நான் சென்னை வந்திருக்கும் செய்தி தெரிந்து நண்பர் எம்.எஸ்.பெருமாள் மூலம் தம்மைச் சந்திக்கும்படி சொல்லியனுப்பியிருந்தார். அதன்படி கமலை சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் சந்தித்தேன். 
அது எமர்ஜென்சி நேரம். இந்திரா காந்தியின் இருபது அம்சத்திட்டத்தை அப்போது முன்னணியிலிருந்த எல்லாக் கலைஞர்களும் பாராட்டிப் பேசுவது போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். அன்றைக்கு கமல் முறை. அவருக்குத் தரப்பட்டிருந்த நிகழ்ச்சியை செய்துமுடித்துவிட்டு வந்தவர் “காரில் ஏறுங்கள். நமக்கு முக்கியமான இரண்டு நிகழ்ச்சிகள் இருக்கின்றன” என்றார். “என்ன?” என்றேன்.
 “ஒன்று, இப்போது படப்பிடிப்புத் தளத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம். ஜெமினி கணேசன் டைரக்ட் செய்யும் ‘லலிதா’ படத்தின் ஷூட்டிங். ஒரேயொரு காட்சி. அரை மணி நேரத்தில் முடிந்துவிடும். அங்கிருந்து வீட்டிற்குப் போகிறோம். வீட்டிலிருந்து ஏர்போர்ட். உங்களுக்கும் டிக்கெட் போடச்சொல்லிவிடுகிறேன். இருவரும் உங்க ஊருக்கு அதான் பெங்களூருக்குப் போறோம். அங்கே கிரிஷ்கர்னாடையும், பி.வி. காரந்த்தையும் சந்திக்கவேண்டியிருக்கிறது. அதுவும் எப்படியும் அரை மணி அல்லது ஒரு மணி நேரத்திற்குள் முடிந்துவிடும். அதற்குப் பிறகு நான் ஃப்ரீதான். நேரே சுஜாதா வீட்டிற்குப் போய்விடுவோம். அவரை எப்படியும் இன்றைக்கு இரவே சந்தித்துவிடலாம். நாளைக் காலை முதல் விமானம் பிடித்து சென்னை வந்துவிடுவோம். நீங்கள் கலந்துகொள்ளும் திருமணத்தில் நாளைக் கலந்துகொள்ளலாம்” என்றார். 
கமலின் வேகமும் அவருடைய ஆர்வமும் மிகவும் பிடித்து இருந்தபோதிலும் என்னால் அவருடைய திட்டத்திற்கு உடன்பட முடியவில்லை. காரணம் நான் சென்னை வந்திருந்தது நண்பர் கண்ணனுடைய திருமணத்தில் கலந்துகொள்வதற்காக. கண்ணன் பிரபல எழுத்தாளர் அகிலன் அவர்களின் மகன். எனக்குச் சென்னையில் ஒரு அடையாளம் ஏற்படுத்தித் தந்ததே கண்ணன்தான். அவர் திருமணத்தின்போது முழுவதும் அவர் கூடவே இருப்பதற்காக வந்திருக்கிறேன். அவருடைய வீட்டில்தான் தங்கியிருக்கிறேன். இப்போது திடீரென்று காணாமல் போய்விட்டு நாளைக்காலை தாலி கட்டும் நேரத்திற்குத் திரும்பிவந்தால் நன்றாயிருக்காது என்று காரணம் சொல்லி மறுத்தேன். ஓரளவு வற்புறுத்திய கமல் என்னுடைய நிலைமையைப் புரிந்துகொண்டார். “சரி இந்த முறையும் சுஜாதாவைச் சந்திக்கமுடியாமல் போகிறது. அடுத்தமுறை எப்படியும் சந்தித்துவிடுவோம்” என்றார். 
அவருடைய முகத்தில் லேசாக ஏமாற்றம் படிந்திருந்ததை உணரமுடிந்தது. ஆனாலும் விமானநிலையம் செல்லும் அவசரத்திலும் என்னை நான் இறங்கவேண்டிய திருமண மண்டபத்தில் கொண்டுவந்து இறக்கிவிட்டுப்போனார். 
கொஞ்ச நாட்கள் சென்றிருக்கும். அப்போதெல்லாம் இப்போதுபோல் தொலைபேசி வசதிகள் பரவலாக இல்லாமலிருந்த நேரம். நான் பணிபுரிந்துகொண்டிருந்த தொலைபேசித்தொழிற்சாலையின் அலுவலகத்திற்குச் சென்னையிலிருந்து தொலைபேசி வந்திருந்தது. கமலுடைய அப்போதைய செயலாளர் சேஷாத்ரி என்பவர் பேசினார். “ஒரு நிமிடம்..... கமல் பேசுவார்” என்றார். 
மறுநொடி கமல் போனில் வந்தார். “அமுதவன் வர்ற ஞாயிற்றுக்கிழமை சென்னை வரமுடியுமா?” என்றார். “சொல்லுங்க என்ன விஷயம்?” என்றேன். “ஒண்ணுமில்லை உங்களுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. அன்றைக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு தேவநேயப்பாவாணர் அரங்கத்துல ‘தமிழின் பதினொன்று சிறுகதைகள்’ அப்படின்னு ஒரு புத்தக வெளியீட்டு விழா இருக்கு. பாலகுமாரன், சுப்ரமண்யராஜூ,மாலன் இவங்கல்லாம் சேர்ந்து எழுதின சிறுகதைகள் வெளியீட்டு விழா. அந்த விழாவில் எம்.பி.சீனிவாசன், பாலுமகேந்திரா கலந்துக்கறாங்க. நான் கலந்துக்கறேன். முக்கியமான விஷயம் என்னன்னா புத்தகத்தை வெளியிடறவர் சுஜாதா. அதனால சுஜாதாவை சந்திக்கிறதுக்கான சந்தர்ப்பம் தானாகவே வந்திருக்கு. அவரை பொதுமேடையில் வைச்சு முதன்முதலாக சந்திக்கிறதை நான் விரும்பலை. அங்கே போவதற்கு முன்பே அவருடைய அறிமுகம் இருக்கணும்னு விரும்பறேன். அதனால நீங்க என்ன செய்யறீங்கன்னா ஞாயிற்றுக்கிழமை அவரோடெயே நீங்களும் சென்னைக்கு வந்துர்றீங்க. ஒரு பத்துமணி அல்லது பதினோருமணி அளவுக்கு அவரைக் கூட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டீங்கன்னா மதியம் இங்கேயே லஞ்ச் முடிச்சுப்போம். பிறகு மாலை புரோகிராம் அட்டெண்ட் பண்ண வசதியாக இருக்கும். அவரோட பேசிட்டு ஏற்பாடு பண்ணிடுங்க” என்றார். “சரி..அப்படியே செய்திருவோம்” என்றேன். 
சுஜாதாவிடம் சொன்னதற்கு “ஆமாய்யா இன்விடேஷன்ல கமலோட பேரும் இருந்துச்சி. நீங்க ஏற்கெனவே கமல் பத்திச்சொல்லியிருக்கீங்களே அதனால அங்கேயே மேடையிலேயே சந்திக்கலாம்னு இருந்தேன். இப்ப நீங்களும் சென்னைக்கு வர்றதாயிருந்தா வாங்க ரெண்டுபேரும் போய்வந்துருவோம்” என்றார். 
மறுநாள் சுஜாதா போன் செய்து “அப்புறம் ஒரு சின்ன திருத்தம். மத்தியானம் லஞ்சுக்கு வரமுடியாது. பகல் உணவுக்கு கல்கி ராஜேந்திரன் கூப்பிட்டிருக்கார். தொடர்கதை எழுதறது சம்பந்தமா அவரோட பேச வேண்டியிருக்கு. அதனால அதுக்கு முன்னாடி வேணும்னா கமல் வீட்டுக்குப் போய் வந்துருவோம். பன்னிரண்டு அல்லது ஒரு மணிக்குக் கிளம்பிருவேன்னு சொல்லிடுங்க” என்றார். 
கமலுக்கு போன் செய்து சொன்னதற்கு “சரி, பத்து மணிக்கு அவரோட வந்துருங்க. அவர் சொன்னமாதிரியே ஒரு மணிக்கெல்லாம் அவர் கிளம்பிடலாம்” என்றார். நானும் சுஜாதாவும் சென்னை சென்று இறங்கினோம். நான் வழக்கம்போல் கண்ணன் வீட்டிற்கும் சுஜாதா மயிலாப்பூரிலிருந்த அவரது மாமனார் வீட்டிற்கும் சென்று தங்கினோம். “கமலிடம் பேசிவிட்டுச் சொல்லுங்க. எங்கே வரணுமோ நான் வந்துர்றேன்” என்று சொல்லிச் சென்றிருந்தார் சுஜாதா. 
காலை எட்டுமணி அளவில் நாங்கள் சென்னை வந்துவிட்ட செய்தியைக் கமலிடம் சொல்லியபோது அவர் குரலில் வழக்கமாயிருந்த உற்சாகம் இல்லை. “வந்துட்டீங்களா.. சரி, அப்புறம் ஒரு அரை மணிநேரம் கழித்து போன் செய்யுங்களேன். அல்லது உங்க நம்பர் கொடுங்க நானே பேசறேன்” என்றார். எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. என்னடா இது இத்தனை நாட்களும் இவ்வளவு ஆர்வமாக இருந்து நம்மை இங்கே இந்த நிகழ்வுக்காகவே வரச்சொல்லிவிட்டு இப்போது இப்படி சுரத்தில்லாமல் பதில் சொல்கிறாரே என்றிருந்தது. அவர் கேட்டபடியே நான் தங்கியிருந்த வீட்டு போன் நம்பரைக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன். 
சொன்னபடியே சற்றுநேரம் கழித்து போன் செய்தார் கமல். “இல்லை ஒரு சின்ன சங்கடம். எனக்கு திடீரென்று ஷூட்டிங் வைத்துவிட்டார்கள். மலையாளப் படம். ஆக்சுவலி இன்றைக்கு எந்தப் படப்பிடிப்பும் இருக்கவில்லை. சுஜாதா சந்திப்பு என்பதற்கு மட்டுமே நேரம் ஒதுக்கி வைத்திருந்தேன். ஹீரோயின் கால்ஷீட் இன்றைக்குத்தான் கிடைத்திருக்கிறது. ஒரு பாடல் காட்சி..அதுவும் படப்பிடிப்பு மகாபலிபுரத்தில் வைத்திருக்கிறார்கள். என்ன செய்தும் தவிர்க்க முடியாது. ஒன்று செய்யுங்களேன். சுஜாதாவை மகாபலிபுரம் கூட்டிவந்திருங்களேன். அங்கேயே சந்திப்பை வைத்துக்கொள்வோம்” என்றார். 
இதெல்லாம் சாத்தியமாகிற காரியம் இல்லை என்று தோன்றிற்று. “இல்லை, சுஜாதா அப்படியெல்லாம் வருவார் என்று தோன்றவில்லை. ஒன்று செய்வோம். மாலை கூட்டம் முடிந்ததும் வேண்டுமானால் நாம் எங்காவது சந்தித்துப் பேசுகிற மாதிரி வைத்துக்கொள்ளலாம். ஆனாலும் அதுவும் எந்த அளவு சாத்தியம் என்று தோன்றவில்லை. ஏனெனில் இரண்டு பேருமே ஒன்றாகத்தான் பெங்களூர் கிளம்புகிறோம். மெயிலில் டிக்கெட் புக் பண்ணியிருக்கிறோம்” என்றேன். 
கொஞ்சம் யோசித்தவர் “அதுவும் சரிதான். அவரை சந்திக்கணும் என்று வரவழைத்துவிட்டு நான் எங்கோ போய்விட என்னைத்தேடி அவர் அலைகிற மாதிரி இருக்கக்கூடாது. சரி ஒன்று செய்வோம். நான் இப்ப காலையிலேயே ஷூட்டிங் போய் முடிந்தவரை என்னுடைய காட்சிகளை எடுக்கிறமாதிரி பார்த்துக்கொள்கிறேன். மற்ற காட்சிகளையும் ஹீரோயினையும் அவர்கள் தனியாப் படமெடுக்கும் அந்த இடைவேளையில் ஒரு அவசர வேலை என்று சொல்லி ஒரு மணிநேரம் பர்மிஷன் வாங்கி வந்திடறேன். சுஜாதாவைச் சந்தித்துவிட்டு மறுபடி சென்று ஷூட்டிங் கலந்துக்கறேன். நீங்கள் ஒரு பதினொன்றரை மணிக்கு சரியாக வீட்டுக்கு வந்துருங்க. நானும் கரெக்டாக பதினொன்றரைக்கு வீட்டுக்கு வந்துர்றேன்” என்றார். “நீங்கள் இதற்காக மகாபலிபுரத்திலிருந்து இத்தனை தூரம் வந்துவிட்டுத் திரும்பவும் மகாபலிபுரம்வரை போகவேண்டுமே” என்றேன். “என்ன செய்யறது சந்தர்ப்பம் அந்த மாதிரி...ஏதாவது சொல்லி பர்மிஷன் வாங்கி வரணும். இன்றைய தினத்தை மிஸ் பண்ண வேண்டாம். நான் எப்படியும் வந்துர்றேன். நீங்க அவரைக்கூட்டிட்டு வீட்டுக்கு வந்துருங்க” என்றார். 
கமல் அப்போது மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு நட்சத்திரம். அவருடைய இந்த செய்கை ஆச்சரியத்தை உண்டுபண்ணியது. இது சராசரி நடிகர்களுக்கு வரமுடியாத இலக்கிய தாகம். அப்போது மிக உச்சத்திலிருந்த எழுத்தாளர் சுஜாதா. அவரை ஒரு நடிகர் இப்படியெல்லாம் முயன்று பார்க்கத்துடிப்பார் என்பதே வியப்பை உண்டுபண்ணுகிற விஷயம்தான். ஆனால் கமல் ஒரு புதுமை விரும்பி. அவரைத் தெரிந்தவர்களுக்கு இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்ற எண்ணம் இருந்தபோதும் அதையும் தாண்டி ஆச்சரியமாகவே இருந்தது. 
சுஜாதாவிடம் போன் செய்து விஷயம் சொல்லியபோது “யோவ் வருவாராய்யா? அப்புறம் அவர் பாட்டுக்கு வராமலிருந்துட்டார்னா என்னுடைய புரோகிராம் எல்லாம் வேஸ்ட்டாயிரும். எனக்கு சாவியை சந்திக்க வேண்டியிருக்கு. போன தடவை கூட அவரைப் பார்க்கலை. அதற்கே அவர் கோவிச்சுட்டார்” என்றார். “இல்லை நிச்சயம் வந்துருவார். உங்களை சந்திக்க அவர் ரொம்பவும் துடிச்சிட்டிருக்கார்” என்றேன். “சரி எல்டாம்ஸ் ரோட்டுல அந்தக் கார்னர் வீடு தானே? அதான் கமல் வீடுன்னு கேள்விப்பட்டிருக்கேன். அங்கே வந்துர்றேன். நீங்க அங்க வந்துருங்க. கொஞ்சம் வெளிலயே நில்லுங்க. நான் வந்துர்றேன்” என்றார். மிகச்சரியாக பதினொன்றே கால் மணிக்கெல்லாம் நானும் நண்பர் அகிலன் கண்ணனும் கமலஹாசன் வீட்டிற்குச் சென்றோம். கமல் வந்துவிட்டாரா என்று பார்ப்பதற்காக உள்ளே போனபோது வீட்டிற்குள் ஏதோ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. 
நல்ல வேளை கமல் இங்கேயே நடித்துக்கொண்டிருக்கிறாரே என்று பார்த்தால் இது கமல் நடிக்கும் படம்தான். ஆனால் இன்றைய படப்பிடிப்பில் கமல் இல்லை. கே.பாலச்சந்தரின் படம். கேபியும் அன்றைக்கு அங்கே இருக்கவில்லை. அவருக்கு பதிலாக அனந்து படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தார். அவர்களிடம் சென்று கேட்டதற்கு கமல் மகாபலிபுரம் போயிருக்கிறார் என்றும் இப்போது வரக்கூடும் என்றும் சொன்னார்கள். சரிதான் எல்லாம் நல்லபடியாகத்தான் இருக்கிறதென்று தோன்ற காம்பவுண்டிற்கு வெளியே வந்து நின்றுகொண்டோம்.
 
சிறிது நேரத்தில் தூரத்தில் ஒரு ஆஸ்டின் கார் வந்தது. (ஆஸ்டினா மாரிஸ் மைனரா என்பது நினைவில்லை.)பழைய மாடல் கார். சுஜாதாதான் ஓட்டிவந்தார். ஏற்கெனவே அந்தக் காரைப்பற்றி அவர் சொல்லியிருந்ததாலும் பத்திரிகைகளிலும் எழுதியிருந்ததாலும் தூரத்திலிருக்கும்போதே கண்டுபிடிக்க முடிந்தது. சுஜாதாவும் எங்களைப் பார்த்து சைகை செய்தார். எங்களருகில் வந்ததும் கார் நின்றது. “என்னய்யா கமல் வந்துட்டாரா?” என்றார் சுஜாதா. “இல்லை வந்துருவார் என்று சொன்னார்கள். வாங்க உள்ளே போயிருவோம்” என்றேன். “காம்பவுண்டுக்குள்ள காரை நிறுத்தலாம் இல்லை?” “ஓ...தாராளமாய் நிறுத்தலாம். ரொம்பப் பெரிய காம்பவுண்ட்” என்றேன். சுஜாதா காரைக் கிளப்பினார். கார் நகரவில்லை. என்னென்னமோ செய்து பார்த்தார். ஒன்றும் பலிக்கவில்லை. கார் நகர மாட்டேன் என்றது. “எப்பவாச்சும் இப்படி ஆயிரும். மாமனாருடையது. மாமனார் யாரையும் தொடவிட மாட்டார். எனக்கு மட்டும்தான் அனுமதி. நல்ல கண்டிஷன்லதான் இருக்கு. ஆனா எப்போதாவது மக்கர் பண்ணும். இப்பப்பார்த்து.......” என்று சொல்லிக்கொண்டே இன்னமும் ஏதேதோ செய்தார். கொஞ்சம் குலுங்கி அதிர்ந்து நிறைய புகை விட்டுவிட்டு அமைதியானதே தவிர கிளம்பவில்லை. மொத்தமாக அணைத்து திரும்பவும் ஆன் செய்து இக்னிஷனைப் போட்டு கியரை மாற்றி எந்த சாகசம் செய்தபோதும் அந்தக் கார் பிடிவாதமாய் மறுத்துவிட்டது. 
ஒரு சங்கடச் சிரிப்புடன் “மெல்க்யூ கொஞ்சம் தள்ளுறீங்களா” என்று கேட்டார் சுஜாதா. அவர் எப்போதும் என்னுடைய இயற்பெயரைச் சொல்லித்தான் அழைப்பார். சரியென்று சொல்லி நானும் கண்ணனும் காரின் பின்புறம் வந்து காரைத் தள்ள ஆரம்பித்தோம். ஒரு முப்பது அடி தூரம் தள்ளினால் கேட் வந்துவிடும். கேட்டிற்குள் நுழைய வேண்டும். தள்ளினவுடன் ஸ்டார்ட் ஆகும் என்று பார்த்தால் ஆகவில்லை. முழுவதும் தள்ளிக்கொண்டுதான் போகவேண்டும் போலிருந்தது. எங்களுடைய புஜபலம் அவ்வளவாகப் போதவில்லை போலிருக்கிறது. எவ்வளவு தள்ளியும் அங்குலம் அங்குலமாகத்தான் கார் நகர்ந்தது. இதோ ஆயிற்று. இன்னமும் ஒரு ஐந்தடி தள்ளினால் கேட் வந்துவிடும் என்று நினைத்துக்கொண்டே தள்ள, சர்ர்ர்ரென்று பின்புறம் ஒரு அம்பாசிடர் கார் வந்து நிற்க கண் இமைக்கும் நேரத்தில் கதவைத் திறந்துகொண்டு ஓடிவந்தார் கமல்.
 எங்களுக்கு நடுவில் வந்தவர் சட்டென்று காரைப்பிடித்துத் தள்ள ஆரம்பிக்க திடீர் வேகத்தில் சரசரவென்று நகர்ந்தது கார்.! 
காருக்கு திடீரென்று வேகம் வந்தவுடன் அனிச்சையாகத் திரும்பிப் பார்த்த சுஜாதா கமல் காரைத் தள்ளிக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்தவுடன் பதறிவிட்டார். “கமல் நீங்க.....நீங்க....வேணாம் விட்டுருங்க” என்று ஏதேதோ சொல்லவந்தவரை- “சார் பிரேக்கை கீக்கைப் பிடிச்சுரப் போறீங்க. காரு நின்னுருச்சின்னா அப்புறம் தொந்தரவாயிரும் பேசாம வாங்க” என்று வந்ததும் ஜோக் அடித்தார் கமல். நல்லவேளையாக கார் நிறுத்துமிடம் உடனடியாக வந்தது. காரிலிருந்து இறங்கிய சுஜாதா “சாரி கமல்..நீங்க வந்து” என்று திணற- “நோ......இட்ஸ் எ ப்ளஷர்” என்று கைகுலுக்கினார் கமல். “ஒரு பிரபல எழுத்தாளரின் காரைத் தள்ளுகின்ற பாக்கியம் எந்த நடிகனுக்குக் கிடைக்கும்? எனக்குக் கிடைச்சிருக்கு” என்ற கமல் அப்போதே ஏதோ நெடுநாள் பழகியவரிடம் பேசுவதைப் போல மிக இயல்பாகப் பேச ஆரம்பித்துவிட்டார். எல்லோரும் கமலுடைய அறைக்குள் சென்றோம். 
கமலுடைய அறையைப் பார்த்ததும் எல்லாருக்கும் அதிர்ச்சி; வியப்பு! 
அத்தனை சாதாரணமாக இருந்தது அறை. வெள்ளை விரிப்பு மெத்தையுடன் கூடிய சின்னதொரு கட்டில், தண்ணீர் பானை, நிறைய புத்தகங்கள், சுவரில் மைக்கேல் ஜாக்சன் படம் என்று மிக எளிமையாக இருந்த அறையைப் பார்த்து வியப்பு. கட்டிலின் தலைமாட்டில் மாட்டப்பட்டிருந்த ‘அலங்காரப்பொருளைப்’ பார்த்து அதிர்ச்சி. “என்னய்யா இது இதை எதுக்கு வச்சிருக்கீங்க?” என்று அதிர்ந்து போய்க் கேட்டார் சுஜாதா. “சும்மாதான் ஒரு வித்தியாசத்துக்கு இருக்கட்டுமேன்னு வெச்சிருக்கேன்” என்றார் கமல். காரணம் கமலின் கட்டிலின் தலைமாட்டில் இருந்தது ஒரு மண்டை ஓடு. நிஜ மனிதனின் மண்டை ஓடு! மிகவும் சிரமப்பட்டு எங்கோ ஒரு சுடுகாட்டில் இருந்து வாங்கிவந்து மாட்டி வைத்திருந்தாராம். பின்னர் இருவருக்குமிடையிலான பேச்சு மிகவும் சுவாரசியமாய் அமைந்திருந்தது. 
வீட்டிற்குள் சென்று தன்னுடைய அண்ணன் சாருஹாசனையும் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்த அனந்துவையும் கூட்டிவந்து எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார் கமல். அன்று அப்படி ஆரம்பித்த கமல் – சுஜாதா நட்பு சுஜாதாவின் இறுதிக்காலம்வரை மிகவும் நெருக்கமானதாக அமைந்திருந்தது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். 'விக்ரம்' படம் ஆரம்பித்து நிறைய படங்களில் இருவரும் இணைந்திருந்தது மட்டுமல்லாமல் கமல் முதன் முதலாகத் தம்முடைய வீட்டிற்கு கம்ப்யூட்டர் வாங்கியபோது சுஜாதாவைக் கூப்பிட்டுத்தான் பொருத்தித் தரச்சொன்னார் என்பதுவரை மிக நெருக்கம். அன்றைக்குப் பேசிக்கொண்டிருந்து விடை பெற்றபோது வாசல்வரை வந்து வழியனுப்பிய கமல் “சார் நானும் கூடவே வரட்டுமா?” என்றார். “இல்லை நீங்க ஷூட்டிங் போகணுமில்லையா?” என்று கேட்ட சுஜாதாவிடம்- “இல்லை வழியில கார் நின்னுருச்சின்னா தள்ளணுமில்ல” என்று கமல் கேட்டது கமலின் அக்மார்க் குறும்பு!
நன்றி: அமுதவன், அமுதவன் பக்கங்கள். 
http://amudhavan.blogspot.com/2012/01/blog-post_02.html
Tags: மருதநாயகம், சுஜாதா, கமல், நட்பு, அமுதவன், சுப்பைய்யா, அகிலன் கண்ணன், சென்னை, Kamal, haassan, Writer, Sujatha, Why, Marudhanayagam, Stopped, discontinued, dropped, Reason, friendship, Photos, Stills, Amudhavan, Subbiah, Akilan Kannan

0 comments:

Post a Comment